பெண்களுக்குச் சம உரிமை எங்கள் பாரம்பரியத்தின் அழிவு.” போராடத் தயாராகும் கிரவேசிய மக்கள் குழுவினர்

“நாட்டில் ஆயுதப் பாவனைக் கட்டுப்பாடுகள் வேண்டும்,” என்று லட்சக்கணக்கான அமெரிக்க மாணவர்கள் தலைநகரை ஸ்தம்பிக்கவைக்கும் குரலை எழுப்பும் அதேசமயம் கிரவேசிய மக்கள் தம் மக்கள் விடயத்துக்காக ஆயிரக்கணக்கில் அணியில் போகிறார்கள்.

முதல்முதலாக உலகில் பெண்களுக்கெதிரான சகலவிதமான வன்முறைகளையும் ஒழித்துக்கட்டவேண்டும், தம்பதிகளுக்குள் நடக்கும் வன்முறைகளைத் தண்டிக்கவேண்டும், இரண்டு பாலினருக்கும் நாட்டில் சமத்துவம் கொடுக்கப்படவேண்டும் போன்ற உறுதிமொழிகளுடன் 2011 ம் ஆண்டு ஆறாம் மாதம் 11ம் திகதி பல ஐரோப்பிய நாடுகள் ஒரு சாசனத்தை உருவாக்கின. அந்தச் சாசனம் அதன்பின் நாடுகளின் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்தந்த நாடுகளின் சட்டங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதே திட்டம்.

அதன்படி துருக்கி உட்பட 29 ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்றங்களில் அச்சாசனம் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுபோலவே கிரவேசியப் பாராளுமன்றத்திலும் அந்தச் சாசனம் விவாதத்துக்கும், சம்மதத்துக்கும் எடுக்கப்படவிருக்கிறது.

ரோமன் கத்தோலிக்க சமயத்தின் பிடியிலிருக்கும் கிரவேசிய பழமைவாத அரசியல்வாதிகள் அந்தச் சாசனம் கிரவேசியாவில் ஏற்றுக்கொள்ளப்படுவதைக் கடுமையாக எதிர்த்துவருகிறார்கள். “கிறீஸ்தவ சமயத்தில் ஆண்கள்தான் முக்கியமானவர்கள், குறிப்பிட்ட சாசனம் பால்கன் நாட்டுக் குடும்பப் பாரம்பரியங்களுக்கு எதிரானது,” என்பது அவர்களது வாதம்.

குறிப்பிட்ட சாசனத்தைப் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரத் தீர்மானித்தவரே ஆளும் பழமைவாதக் கட்சியின் பிரதமர் ஆந்திரே பிளென்கோவிச். ஆனால் அவரது கட்சிக்குள்ளேயே கத்தோலிக்க சமயத்தின் பிற்போக்கு வாதங்களை ஆராதிப்பவர்கள் இருக்கிறார்கள். பிரதமர் நாட்டின் “துரோகி,” என்று கூச்சலிட்டு அச்சாசனத்தை மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தூக்கியெறியவேண்டும் என்றும் கேட்டு கிரவேசியக் கத்தோலிக்க விளாடோ கோசிச் கேட்டுக்கொண்டிருப்பதே ஆயிரக்கணக்கானோர் அணியில் திரளக் காரணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *