எகிப்தின் ஜனாதிபதி தேர்தல் ஒரு கண் துடைப்பா?

இந்த சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் காலத்தில் ஜனாதிபதி என்ற அதிகாரத்தில்  இருந்துகொண்டு அடுத்துவரும் தேர்தலை அழகாக இயக்கி அதில் தனது ஆதரவாளர் ஒருவரைத் தெரிந்தெடுத்துத் தனக்கு எதிராகப் போட்டியிடவைத்து 100 விகித வாக்குகளும் பெற்று வெற்றிபெறுவதென்றால் சின்ன விசயமா?

கற்பனை செய்து பாருங்கள் எகிப்திய ஜனாதிபதி அப்தல் பத்தா அல்-ஸிஸியின் அரசியல் வாழ்க்கை எப்படிக் கஷ்டமானதாக இருக்கும் என்பதை!

ஒர் கொடுங்கோல்ச் சர்க்கரவர்த்தி போன்று எகிப்தை 30 வருடங்கள் கட்டியாண்ட ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியின் கடைசி வருடங்களில் எழுந்த மனித உரிமைக் குரல்களின் வேகத்தை ஆயுதமாக்கித் தனது இஸ்லாமிய பழமைவாத அரசை அங்கே நிறுவ முயன்றார் முஹம்மது முர்ஸி. அவரது ஆட்சி நீண்டகாலம் நீடிக்கவில்லை.

தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுந்ததைச் சாதகமாக வைத்து முர்ஸியால் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக அமர்த்தப்பட்ட ஸிஸி 2014 ஆட்சியைக் கைப்பற்றினார், கண் துடைப்புக்காக நடாத்தப்பட்ட ஒரு ஜனாதிபதித் தேர்தலில்.

ஏற்கனவே குழம்பியிருந்த எகிப்தின் அரசியல் சகதி ஸிஸியின் ஆட்சியில் மேலும் தீவிரமானது. பாலஸ்தீன எல்லையான காஸா, ஐ.எஸ் எகிப்துக்குள் நடாத்தும் நீசத்தனம், சிறுபான்மையினர்களின் கிளர்ச்சிகள் போன்றவைகளைத் தனக்குச் சாதகமாக்கிப் படிப்படியாக நாட்டின் சுதந்திரக் குரல்களையெல்லாம் நசுக்கிவிட்டார் ஸிஸி.

சர்வதேச ரீதியில் மத்திய கிழக்கின் அமைதிக்கு அவசியமான எகிப்திய அரசை திருப்தியாக வைத்திருக்க அவர்களுக்கு அமெரிக்கா தாராளமான இராணுவ, பொருளாதார உதவிகளை வழங்குவதுடன் நாட்டை இரும்புக் கரத்துடன் ஆளும் ஸிஸியையும் ஆதரிக்கிறது. ஐரோப்பாவின் எல்லைக்குள் வரும் அகதிகளைக் கட்டுப்படுத்த எகிப்தின் நட்பு அவசியமாதலால் ஐரோப்பாவும் ஸிஸியின் மனித உரிமை மீறல்களை அதிகம் கண்டுகொள்வதில்லை. முந்தைய முர்ஸி அரசைப் போலன்று சவுதி அரேபியாவுடன் ஸிஸி நட்பை வளர்ந்துக்கொண்டதால் அங்கிருந்தும் ஸிஸிக்கு ஆதரவே கிடைக்கிறது.

இரண்டாம் உலகப்போரின் பின்பு என்றுமில்லாத அளவு பாரிய உள்நாட்டுப் பிரச்சினைகளைக் கொண்டிருக்கும் இன்றைய எகிப்தில் தேர்தல் காலம் வந்துகொண்டு இருப்பதால் அங்கே தொடர்ந்தும் ஸிஸியே ஆட்சியில் இருப்பது நல்லதென்று சர்வதேச அபிப்பிராயம் இருக்கிறது. 30 வருடங்கள் முபாரக்கின் காலத்தில் இல்லாத அளவில் ஸிஸியின் நான்கு வருடங்களில் எகிப்தில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. இப்படியான சமயத்தில் நாட்டில் தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதனால் உள்நாட்டில் தனக்கு சவாலாகத் தேர்தலில் நிற்பவர்களையெல்லாம் ஒதுக்கிக் கட்டவேண்டியிருந்தது.

அதன் விளைவுதான், அஹ்மத் கொனசோவா, சாமி அன்னான், அஹ்மத் ஷபீக், காலித் அலி, அன்வர் சதாத் என்று எகிப்திய ஜனாதிபதித் தேர்தலில் நிற்கத் தயார் என்று அறிவித்தவர்கள் எல்லோரும் வெவ்வேறு விதமான நடவடிக்கைகளால் வாயடைக்கப்பட்டார்கள்.

இராணுவத்தில் உயர்பதவியிலிருந்த அஹ்மத், கொனசோவா, அன்னான் எகிப்திய இராணுவ வரைமுறைகளுக்கு எதிராகப் பதவியிலிருக்கும்போது அரசியலுக்குள் ஈடுபட்டுக் கிளர்ச்சிகள் செய்ய முற்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதுசெய்யப்பட்டு உள்ளே தளப்பட்டார்கள்.

எமிரேட்ஸில் இருந்தபடி எகிப்திய ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னை அறிவித்துக்கொண்ட முன்னாள் அமைச்சர் அஹ்மத் ஷபீக் எமிரேட்ஸிலிருந்து வெளியே விரட்டப்பட்டு எகிப்தில் இறங்கியதும் காணாமல் போனார். திடீரென்று ஒரு ஹோட்டலில் தன்னைக் காட்டிக்கொண்ட அவர் தான் தேர்தலில் இறங்கப்போவதில்லை என்று அறிவித்தார்.

மனித உரிமைகளுக்காகப் போராடும் வழக்கறிஞர் காலித் அலி ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தார் பின்னர் அன்வர் சதாத் என்பவர் தானும் ஜனாதிபதி தேர்தலில் குதிக்கப்போவதாக அறிவித்தார். இருவர் மீதும் உடனே ஸிஸியின் இரகசியப் பொலீஸாரின் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டு இருவருமே வாயடைக்கப்பட்டார்கள்.

இறுதியாக, 26ம் 28ம் திகதிகளில் வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் ஸிஸி மட்டுமே வேட்பாளர் என்ற நிலைமை உண்டானதும் புதிய பிரச்சினையும் உண்டானது. எதிர்தரப்பில் ஒருவராவது இல்லாவிட்டால் தேர்தலில் ஜெயித்ததாக எப்படிச் சொல்வது?

மீண்டும்,கற்பனை செய்து பாருங்கள் எகிப்திய ஜனாதிபதி அப்தல் பத்தா அல்-ஸிஸியின் அரசியல் வாழ்க்கை எப்படிக் கஷ்டமானதாக இருக்கும் என்பதை!

எனவே தனது ஜனாதிபதிப் போட்டியின் உதவிளாரகாக இருந்த ஒருவரையே தன்னை எதிர்க்கும்படி வேட்பாளராக்கித் தேர்தலுக்குப் போகிறார் அல்-ஸிஸி. அவரது பெயர்கூட இரண்டாம்பட்சமே. அவர் 96 அல்ல 100 விகிதம் வாக்குகள் எடுக்காவிட்டால் ஒருவேளை எதிர்ப்பக்கம் உள்ளவர் ஏதாவது குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளே தள்ளப்படும் அபாயம் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *