பாலஸ்தீன பிரதமரை கொல்ல முயற்சி எடுத்தது யார்? வளைகுடா அரசியலில் எது வெட்ட வெளிச்சம்?

பாலஸ்தீன பிரதமர் ராமி ஹம்துல்லாஹுவும் பலஸ்தீன இரகசியப் பொலீஸ் அதிபர் மஜீத் பராஜும் சுமார் பத்து நாட்களுக்கு முன்பு [13.03] காஸா பிராந்தியத்துக்கு விஜயம் செய்த சமயம் அவர்களுடைய வாகனங்கள் கண்ணிவெடித் தாக்குதலுக்கு உள்ளானது. ஏழு பேர் காயமடைந்தார்கள் குறிவைக்கப்பட்ட இருவரும் தப்பிவிட்டார்கள்.

காஸா பிராந்தியத்தின் பாதுகாப்பு, பாலஸ்தீன அதிகாரத்தில் இருக்கும் பத்தா அமைப்பின் [பாலஸ்தீன விடுதலை இயக்கம்] எதிரிகளான ஹமாஸின் கைகளில்தான் இப்போதும் இருக்கிறது. ஆனால், உத்தியோகபூர்வமாக இவ்விரு பகுதியினரும் கடந்த வருட இறுதியில் கைகுலுக்கிக்கொண்டு இவ்வருட ஆரம்பம் முதல் தாம் ஒன்றிணைந்து பாலஸ்தீன அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளப் போவதாக அறிவித்திருந்தார்கள்.

மேலும் பின்னோக்கிச் சென்று அக்கைகுலுக்கலின் காரணம் எதுவென்று ஆராய்ந்தால் அதைக் கத்தார் – சவூதி அரேபியாவும் நண்பர்களின் முரண்பாடுகளில் கண்டுபிடிக்கலாம். ஹமாஸ் இயக்கத்தினரின் முதுகெலும்பாக இருந்த கத்தாருக்குச் சக அரபு நாடுகளை வைத்து டிரம்ப் சாட்டையடி கொடுக்க ஆரம்பித்ததால் ஹமாஸ் பலமிழந்துவிட்டது. அத்துடன் எகிப்துடன் இருக்கும் காஸா எல்லையின் மூலமாக ஆயுதங்கள் மற்றும் பொருட்களைக் கடத்திவந்துகொண்டிருந்த ஹமாஸின் அவ்வழிகளையும் எகிப்தும் இஸ்ராயேலும் சேர்ந்து மூடிவிட்டன.

ஹமாஸுக்குக் கடைசியாகக் காட்டப்பட்ட வழி “வாயை மூடிக்கொண்டு பாலஸ்தீன அதிகாரத்துடன் சேர்ந்து ஜெருசலேம் விடயத்தில் அமெரிக்கா எடுக்கப்போகும் முடிவுகளை கண்டும் காணாமல் நடந்துகொள்,” என்பதாகும்.

அதேபோல “ஜெருசலேமை இஸ்ராயேலின் தலைநகராக அமெரிக்கா எடுத்த முடிவை அளவுக்கதிகமான கூச்சல் போட்டு உள்ளதையும் கெடுத்துக்கொள்ளாதே,” என்ற செய்தி பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கும் எகிப்து, சவூதி அரேபியா மூலமாகக் கொடுக்கப்பட்டுவிட்டது. பொருளாதார ரீதியாகப் பாலஸ்தீனுக்குக் கொடுக்கப்பட்டுவந்த அமெரிக்க உதவிகளையும் டிரம்ப் அதிகாரம் பெருமளவில் நிறுத்திவிட்டது.

கட்டாயக் கல்யாணம் செய்துவைக்கப்பட்ட ஹமாஸும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினரிடையே ஏற்பட்டுவரும் குடும்பச் சண்டைகளில் ஒன்றுதான் பாலஸ்தீனத்தின் அதிகாரமற்ற பிரதமரைக் கொல்ல ஹமாஸ் முயற்சித்ததாகக் காட்டிய எச்சரிக்கை.

ராமி ஹம்துல்லாஹ் கொலை முயற்சியின் பின்னணியில் இருப்பது ஹமாஸ் தான் என்று எதிர்பார்த்ததுபோலவே குற்றம் சாட்டியது பாலஸ்தீன நிர்வாகம். அதிகமான ஊடகங்களின் பெருங்கவனத்தைக் கவராத இவ்விவகாரத்தை ஹமாஸ் மறுத்தது, கண்டிக்கவும் செய்தது. அதற்கும் மேலாக அக்கொலை முயற்சியில் ஈடுபட்டவரைக் காட்டிக்கொடுத்தால் 5000 டொலர்கள் சன்மானம் தருவதாகவும் அறிவித்தது. ஆனால், காஸாவுக்குள் ஹமாஸ் தவிர எந்த ஒரு இயக்கமும் இயங்க முடியாத சர்வாதிகாரமே நடப்பது உலகமறிந்த விடயம்.

திரை விழுவதற்கு முன்னர் கடைசிக் காட்சியாக ஹமாஸ் அக்கொலை செய்ய முயற்சித்தவர்கள் பலரைக் கைது செய்ததாகவும் கொல்ல முயன்றவர் அந்தக் கைது முயற்சியில் கொல்லப்பட்டுவிட்டதாகவும் அறிவித்திருக்கிறது.

 

எழுதுவது சாள்ஸ் ஜே

 

இதையும் படிக்க

https://www.vetrinadai.com/news/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%86/

https://www.vetrinadai.com/news/%e0%ae%b0%e0%ae%b7%e0%af%8d%e0%ae%af-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%b1%e0%af%8d/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *