“பலஸ்தீனர்களை அங்கவீனமான சமூகமாக்காதீர்!”

“சொந்த மண்ணுக்குத் திரும்பும்”  Great March of Return] கோஷத்துடன் அகிம்சை எண்ணத்துடன் ஒரு மாதத்துக்கு முன்பு போராட்டம் ஆரம்பித்த காஸா வாழ் பலஸ்தீனர்களை , அது தொடங்கிய வெள்ளியன்றே வழக்கம்போல இஸ்ராயேல் எல்லைக்காவலர்கள் மீது கல்லெறிந்து அவர்களை ஆக்ரோஷப்படுத்துவதாக மாறிவிட்டது. கடந்துபோன ஒவ்வொரு வெள்ளியன்றும் மேலும் மோசமாகிய அப்போராட்டம் இதுவரை 48 உயிர்களைக் குடித்திருக்கிறது. சில நூறுபேர் கடுமையாகக் காயமடைந்திருக்கிறார்கள். உடல் அங்கங்களை இழந்தவர்கள் பலர்.

காஸாவுக்கும் இஸ்ராயேலுக்கும் இருக்கும் எல்லையில் கூடாரங்கள் போட்டு குடும்பத்துடன் வாழ்ந்தபடியிருக்கிறார்கள் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள். வெள்ளிக்கிழமைகளில் வாகன டயர்களை எரித்துக் கறுப்புப் புகை வரவைத்துவிட்டு அதனுள் நின்று இஸ்ராயேல் எல்லைக்காவலர்களை நோக்கிக் கல்லெறிகிறார்கள். அதில் ஈடுபடுகிறவர்கள் பலர் இளவயதினரே. புகைக்குள் யாரைத் தாக்குகிறோம் என்று தெரியாத காவலர்கள் அவர்களை நோக்கிச் துப்பாக்கிச்சூடு நடத்தும்போது பாதிக்கப்படுகிறவர்கள் பலர்.

இறந்துபோனவர்களில் ஆறு பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்று சொல்கிறது பலஸ்தீன ஆரோக்கிய அமைச்சு. இளவயதினர் கொல்லப்படுவதை ஐ.நா வும் மனித உரிமை அமைப்புக்களும் கண்டிக்கின்றன, அவைபற்றிய விசாரணை நடத்தவேண்டும் என்று அறிக்கைகள் விடுகின்றன. அதேசமயம் காஸாவுக்குள் கல்வியோ, வேலையோ இல்லாதவர்களிடையே அதே விதமான போராட்டத்தைத் தொடரும்படி தூண்டி வருகிறது அப்பிராந்தியத்தைத் தங்கள் கைக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாத இயக்கம்.

இதனிடைய 22 வருடங்களுக்குப் பின்பு முதல் முறையாக பிளவுபட்டிருக்கும் சகல பலஸ்தீன அமைப்புக்களும் ஒன்றுகூட பலஸ்தீனர்களின் எதிர்காலம் பற்றிய மாநாடு ஒன்றில் கூடியிருக்கின்றன. இஸ்ராயேலுடனான பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிடலாமா என்பது முதல் இஸ்ராயேலை ஒரு நாடாக அங்கீகரித்ததை வாபஸ் வாங்கிக்கொள்ளலாமா போன்ற பல விடயங்கள் விவாதிக்கப்படுகின்றன.

அமெரிக்கா தனது தூதுவராலயத்தை ஜெருசலேமுக்கு மாற்றும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அது ஜெருசலேமை இஸ்ராயேலின் தலைநகராக்குவதை மறைமுகமாக ஒத்துக்கொள்வதே என்பதைப் பலஸ்தீனர்களும் அறிவார்கள். அதன் மூலம் ஜெருசலேம் முழுவதும் இஸ்ராயேல் கைக்குள் போய்விடும் என்பதை அவர்கள் அறிந்திருந்தாலும் அவ்வியக்கங்களிடையே இருக்கும் பிளவுகள் மிகவும் ஆழமானவை.

பத்திரிகையாளரான அஹ்மத் அபு அர்தேமா என்பவரால் பேஸ்புக்கில் ஆரம்பிக்கப்பட்டு காஸாவைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தினரால் கைப்பற்றப்பட்டுவிட்ட போராட்டத்தை நிறுத்துவது அல்-பத்தா இயக்கத்தின் பலஸ்தீன அதிகாரத்தின் தலைமைக்கு முடியாது. அம்முயற்சி அவர்களுக்குப் பலஸ்தீனர்களிடையே மேலும் எதிர்ப்பையே உண்டாக்கும்.  

ஆனால் அங்கவீனர்களாகும் பலஸ்தீனர்கள் பலஸ்தீனர்களுக்கு ஒரு பலவீனம் என்று சுட்டிக்காட்டுகிறார் காஸா தவிர்ந்த மற்றைய பாகங்களில் தமது அதிகாரத்தை வைத்திருக்கும் அல்-பத்தாவின் தலைவர் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ்.

“இளவயதினரை காஸா எல்லையிலிருந்து தள்ளி வைத்திருங்கள். ஒரு அங்கவீனர்களைக் கொண்ட சமூகத்தை நாம் உண்டாக்கலாகாது,” என்று குரல்கொடுக்கிறார் அப்பாஸ். அவரது குரலுக்கு எத்தனை மதிப்பிருக்கும் என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *