வட- தென் கொரியாக்களிடையே கலாசாரப் பாலம்

தென்கொரியாவில் நடந்த ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளின் முக்கிய நல்விளைவுகளில் ஒன்றாக வட- தென் கொரிய நாடுகளுக்கிடையே உண்டாகியிருக்கும் நல்லெண்ணங்களைக் குறிப்பிடலாம். வட கொரிய அதிபரின் சீன விஜயம், டிரம்ப்புடன் சந்திக்கப் போவதாக அறிவிப்பு, அணு ஆயுத ஆராய்ச்சிகளை நிறுத்துவதாக வட கொரியா அறிவிப்பு ஆகியவைகளுடன் தென் கொரியக் கலாச்சாரக் குழுவொன்று வடகொரியாவுக்குள் நிகழ்ச்சிகளை நடாத்துவது போன்ற இதுவரை எவராலுமே கற்பனை செய்துபார்க்க முடியாத விடயங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன, அல்லது நடந்திருக்கின்றன.

இசை, உடல்பயிற்சி, விளையாட்டு உட்பட்ட 120 கலைஞர்களைக் கொண்ட தென் கொரியக் குழு வடகொரியாவுக்குப் போனது. தலைநகரான பியாங்யங் நகரில் இக்குழுவினர் தங்கள் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தினர். 1999, 2002, 2005 களில் தனியாக வடகொரியாவில் இசை நிகழ்ச்சி நடாத்திய 61 வயதான சோய் ஜின் ஹீ, 2005 தனியாக வட கொரியாவில் இசை நிகழ்ச்சி நடத்திய சோ யொங் பில் ஆகியோரும் இக்குழுவில் பங்குபற்றினர். நிகழ்ச்சிகள் கொரியாவின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன.

சித்திரை முதலாம் திகதியன்று பியாங்யங் தேசிய கலையரங்கில் மாலை 05.30 க்கு நடாத்தப்பட இருந்த இசை நிகழ்ச்சியில் தானும் கலந்துகொள்ளப்போவதாக வட கொரியாவின் அதிபர் கிம் யொங் உன் திடீரென்று அறிவித்ததால் அந்த நிகழ்ச்சி சுமார் 80 நிமிடங்கள் தாமதமாக ஆரம்பித்தது. நிகழ்ச்சிக்குத் தன் மனைவியுடன் விஜயம் செய்த கிம் இசைக் கலைஞர்களுடன் சந்தித்துப் பேசிப் படங்கள் எடுத்து எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். கிம்மைத் தவிர அவரது சகோதரியும் பல வட கொரிய உயரதிகாரிகளும் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

அதன்பின்பு தொடர்ந்தும் தமது நிகழ்ச்சிகளை அடுத்தடுத்த நாட்களில் நடாத்திய தென் கொரியக் குழுவினர் நான்காம் திகதியன்று மீண்டும் தென் கொரியாவுக்கு வந்து சேர்ந்தனர்.

இந்த நல்லெண்ண நிகழ்ச்சிகளை அடுத்து இம்மாதம் 27ம் திகதியன்று வட- தென் கொரிய எல்லைப் பாதுகாப்பு வலயத்தில் இரண்டு நாடுகளும் சந்தித்து கொரியப் பிராந்தியத்தில் அமைதிக்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடாத்தவிருக்கிறார்கள்.

எழுதுவது சாள்ஸ் ஜெ.போர்மன்

 

 

 

http://www.vetrinadai.com/news/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%86/

 

 

http://www.vetrinadai.com/featured-articles/russia-election/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *