ஒரு வருடத்தின் பின்பு மக்ரோனின் பிரான்ஸ்

பதவியேற்று ஒரு வருடங்களாகப் பல மாற்றங்களைப் பிரான்ஸில் செய்துவருகிறார் இம்மானுவல் மக்ரோன். பிரான்ஸின் மிக இளைய ஜனாதிபதியான அவர் எவரும் எதிர்பாராத வேட்பாளராக, புதுக் கட்சியை ஆரம்பித்து வெற்றியெடுத்தார், பல வருடங்களாகவே பிரான்ஸ் அரசியலில் முன்னேறிவந்த வலதுசாரி நிறுவாத அரசியல்வாதியான மரீன் லி பென்னை வீழ்த்தி.

சர்வதேசத் தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையைப் பிரான்ஸில் நிறைவேற்றவிருப்பதாகச் சொன்னதுபோலவே செய்துவரும் மக்ரோனை எதிர்த்து பழமைவாதிகளும், இடதுசாரிகளும் பல எதிர்ப்புப் பேரணிகளை நடாத்தி வருகின்றனர். தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டங்களில் இறங்கி அவ்வப்போது நாட்டை ஸ்தம்பிக்க வைத்து வருகின்றனர்.

குறிப்பிடத்தக்கதாக ரயில்வே ஊழியர்கள் நடாத்திவரும் வேலை நிறுத்தப்போராட்டம் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. அரசோ தான் விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்று மீண்டும் மீண்டும் அறிவிக்கிறது.

ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் 5 விகிதத்துக்கு அதிகமான ஊதிய உயர்வு கேட்டுப் போராடுகிறார்கள். அவர்கள் போராட்டம் தொடருமானால் விமான நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தமுடியாத நிலைமை வருமென்று அரசு எச்சரித்திருக்கிறது.

இதற்கு நடுவே மக்ரோன் ஆட்சியில் திருப்தியுள்ளவர்கள் தற்போதைய நிலைமையில் 41 விகிதமானவர்கள் என்று கருத்துக் கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அவருக்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகள் இருவரும் பதவியேற்ற ஒரு வருடத்தின்பின்பு இத்தனை அதிக பேரால் ஆதரிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *