உலக மைதானத்தில் இளவரசர்களின் அரசியல் விளையாட்டு

2017 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 4ம் திகதி எவரும் கனவு கண்டிருக்காத சிலரை “தங்கக் கூண்டு” என்று குறிப்பிடக்கூடிய ரியாத்திலிருக்கும் ரிட்ஸ் கார்ல்ட்டன் என்ற உல்லாசச் சிறைக்குள் ‘தங்கவைத்தா’ எம்.பி.எஸ் குறிப்பிடப்படும் சவூதியின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான். சர்வதேச அரசியல், பொருளாதார வட்டங்களிலும் ஊடகங்களிலும் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது அந்த நகர்வு.

சுமார் ஒரு டசின் சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் சிலரும் அதில் அடங்குவர். அந்த நடப்புக்குச் சில நாட்களுக்கு முன்னர் சவூதிய மன்னரால் நியமிக்கப்பட்ட ஒரு லஞ்ச ஊழல் அதிகாரம் நாட்டின் பொதுச் சொத்துக்களைக் கையாடியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விசாரணை செய்துகொண்டிருப்பதாக சவூதிய அரச அறிவுப்புத் தெரிவித்தது. அதைத் தவிர வேறெந்த விபரங்களும் அங்கிருந்து வெளிவரவில்லை, அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் எதுவும் சவூதியின் நடவடிக்கையைப் பற்றிக் கண்டனமோ, கருத்தோ தெரிவிக்கவில்லை.

இரண்டு நாட்கள் கழிந்தபின்புதான் டிரம்ப் முதல் தடவையாக சவூதியில் நடந்தவை பற்றி “கைதுசெய்யப்பட்ட சிலர் சவூதிய அரச உடமைகளைச் சில வருடங்களாகவே சூறையாடி வருகிறார்கள். அரசன் சல்மானும் மகன் முஹம்மதுவும் எடுக்கும் லஞ்ச ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது,” என்று டிரம்ப் டுவிட்டினார்.

2017 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 4ம் திகதிக்கு ஒரு வாரம் முன்பு எம்.பி.எஸ்ஸைச் சில நாட்களாகச் சந்தித்து தினசரி நீண்ட நேர இரகசியச் சம்பாஷணைகளில் ஈடுபட்டவரின் பெயர் ஜெராட் குஷ்னர், டிரம்ப்பின் மருமகன். அவர்கள் என்ன கதைத்தார்கள், அப்பேச்சுவார்த்தைகளில் குறிப்பிட்ட கைதுகள் பற்றிய விடயங்கள் ஆலோசிக்கப்பட்டனவா என்பதைப் பற்றி அமெரிக்காவோ, சவூதிய வட்டாரங்களோ மூச்சு விடவும் மறுக்கின்றன.

ஆனால் முஹம்மது பின் சல்மான் தனக்கும் ஜெராட் குஷ்னருக்கும் நெருங்கிய தொடர்பும், புரிந்துகொள்ளலும் இருப்பதாகவும், ஜெராட் தனது “பைகளுக்குள்” இருப்பதாகவும் சொன்னதாகச் சில நம்பிக்கையான அதிகார வட்டங்கள் சொல்லியிருக்கின்றன. ஒருவேளை முஹம்மது பின் சல்மான் தனக்கும் டிரம்ப் – அதிகாரத்துக்கும் நெருங்கிய புரிதல் இருப்பதைக் காட்டிக்கொள்ள அப்படிச் சொல்லியும் இருக்கலாம்.

டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேறியவுடன் அவரது நெருங்கிய, நம்பத்தகுந்த ஒருவராக உயர்த்தப்பட்டவர் ஜெராட் குஷ்னர். தனது மகளின் கணவன் என்பதற்காக டிரம்ப் ஜெராட்டுக்கு அந்த இடத்தைக் கொடுத்து நாட்டின் அதி முக்கிய அரச விடயங்களை அறிந்துகொள்ளும் அனுமதியையும் கொடுத்தபோதே பல எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.

அவர்களில் முக்கியமானவர் ரெக்ஸ் டில்லர்சன், சமீபத்தில் திடீரென்று பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட அமெரிக்க வெளிவிவகார அமைச்சர். “தனது தேவைக்காக ஜெராட் அமெரிக்க வெளிவிவகார அரசியல் முடிவுகளை வேறு நாடுகளுக்கு “விலைபேசுகிறார், நாட்டின் வெளிவிவகார அமைச்சர் நானா ஜெராடா?” என்று டில்லர்சன் கோபப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

எப்படியானாலும் சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு ஜெராட் குஷ்னரின் “நாட்டின் அதி முக்கிய அரச விடயங்களை அறிந்துகொள்ளும் அனுமதி,” வெள்ளை மாளிகையின் உயர்மட்ட அதிகாரி ஜோன் கெல்லியால் திடீரென்று பிடுங்கப்பட்டது. அந்த முடிவுகளில் தலையிடமாட்டேன் என்று டிரம்ப் அறிவித்தார், மீண்டும் முன்னிருந்த தரத்துக்கான அனுமதிக்கு விண்ணப்பிக்கமாட்டேன் என்றார் குஷ்னர்.

தொடர்ந்தும் டிரம்பின் நெருங்கிய அரச முடிவுகளில் குஷ்னர் ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டாலும் எதற்காக அவரது தரம் கீழிறக்கப்பட்டது என்பதற்கான விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை.

டிரம்பின் மத்திய கிழக்கு அரசியல் விவகாரங்களில் ஜெராட் குஷ்னரின் முக்கியமானவராகச் செயற்பட்டு வருபவர் என்பது உலகறிந்த விடயம். ஜெருசலேமை இஸ்ராயேலின் தலைநகராக அங்கீகரிக்கும் முடிவில் யூதரான குஷ்னரின் பலமான குரல் இருப்பதும் பகிரங்கமான விடயமே. அவ்விவகாரங்களில் பங்குபற்றிய மற்றைய முக்கிய அமெரிக்க ராஜதந்திரிகளை ஓரங்கட்டியே குஷ்னர் தனது நிலைப்பாட்டுக்கு டிரம்பைக் கொண்டுவந்தார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

அதைத் தவிர தீவிரவாத இயக்கங்களுக்கு உதவியதாகக் கத்தாரைத் தண்டிப்பதில் சவூதி அரேபியா, எமிரேட்ஸ், பஹ்ரேன், குவெய்த் நாடுகள் ஈடுபடுவதை அமெரிக்கா ஆதரிப்பதற்கும் குஷ்னரின் நிலைப்பாடு காரணமாக இருக்கக்கூடுமா?

சவூதி, எமிரேட்ஸ் நாட்டுப் பட்டத்து இளவரசர்களுடன் வாட்ஸப்பில் சம்பாஷித்து குஷ்னர் அரசியல் முடிவுகளை எடுக்குமளவுக்கு அவர்களுக்கு நெருங்கியவராக இருக்கிறார் என்பது குறிப்பிடப்படுகிறது. அப்படியான முக்கிய அரசியல் சம்பாஷணைகளின் விபரங்களை வெளியிட வெள்ளை மாளிகை அதிகாரிகள் மறுத்தே வருகிறார்கள்.

சவூதி அரேபியா, எமிரேட்ஸ், பஹ்ரேன், குவெய்த் நாடுகள் தங்களது தொடர்புகளைக் கத்தாருடன் துண்டித்துக்கொள்ளும் நிலைமையை அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் டில்லர்சனின் நிலைப்பாட்டையும் மீறி உற்சாகப்படுத்தியவர் குஷ்னர்தான். அச்சமயத்தில் அந்த நாடுகளிடையே பேச்சுவார்த்தைகள் நடாத்திச் சுமுகமான நிலைமையை உண்டாக்க டில்லர்சன் எடுத்த முயற்சிகளைக் குஷ்னர் தடுத்து நிறுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

பல இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களுக்குக் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேல் ஆயுதங்கள், தளபாடங்கள், பொருளாதார உதவி, அவ்வியக்கத்தினரை மறைத்துவைத்தல் போன்றவற்றில் கத்தார் மட்டுமல்ல சவூதியும் அதன் நட்பு நாடுகளும் ஈடுபட்டன என்பது பல தடவைகள் நிரூபிக்கப்பட்ட விடயமே. அப்படியிருக்க எதற்காக் கத்தாரை மட்டும் அக்குற்றத்துக்காகச் சுட்டிக்காட்ட குஷ்னர் முற்படக் காரணம் தனிப்பட்ட பொருளாதார ஈடுபாடாக இருக்குமா என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது.

நியூ ஜெர்சியிலிருந்த தனது குடும்பச் சொத்துக்களை விற்று 2007 இல் குஷ்னர் சுமார் 500 மில்லியன் டொலர்கள் திரட்டினார். அத்துடன் கடன்கள் எடுத்து மான்ஹட்டனில் ஒரு முக்கிய வியாபாரக் கட்டடத்தை 1,8 பில்லியன் டொலர்களுக்கு வாங்கினார். அச்சமயத்தில் அமெரிக்காவின் வியாபார ஸ்தலங்களின் விலைகள் உச்சத்தில் இருந்தது. குஷ்னர் குடும்பத்தினர் அதற்காகக் கொடுத்த தொகை அளவுக்கதிகமானது என்று விமர்சிக்கப்பட்டது.

2008 இல் அமெரிக்காவைத் தாக்கிய பொருளாதாரப் பின்னடைவினால் அதன் பெறுமதி மேலும் குறைந்துவிட்டது. அதற்காகப் பெரும் கடன்களை வாங்கிய குஷ்னர் அவ்வியாபாரத்தில் சேர்ந்துகொள்ள சர்வதேச ரீதியில் முதலீட்டு நிறுவனங்களை நாடவேண்டியதாயிற்று.

அப்படியான தேடலில் 2011 இலிருந்து ஈடுபட்டுவரும் குஷ்னர் குடும்பத்தின் சார்பாக ஜெராடின் தந்தை 2017 இல் அன்றைய கத்தாரின் பிரதமராக இருந்த ஷேக் ஹமாத் பின் யஸீம் அல் தானியைக் கூட்டுச் சேர்ந்துகொள்ள விண்ணப்பித்து அதை ஷேக் ஹமாத் மறுத்துவிட்டார். அதே விண்ணப்பம் மீண்டும் ஒருமுறை ஜெராடின் தந்தையால் கத்தாரின் வர்த்தக அமைச்சினிடமும் தெரிவிக்கப்பட்டு அதுவும் மறுக்கப்பட்டது. காரணம், கொடுக்கப்பட்ட தொகை கட்டடத்தின் பெறுமதிக்குக் குறைவாக இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்காகக் குஷ்னர் குடும்பம் கட்டவேண்டிய கடன், வட்டி ஆகியவையின் அடுத்த தவணை 2019ம் இரண்டாம் மாதம் ஆகும்.

கத்தார் குஷ்னர் குடும்பப் பொருளாதார முதலீட்டு விண்ணப்பத்தை மறுத்த ஓரிரு மாதங்களின் பின்புதான் டிரம்ப்பின் முக்கிய சவூதி அரேபிய விஜயம் நடந்தேறியது. அந்த விஜயத்தைத் தொடர்ந்துதான் கத்தாரை ஒதுக்கிவைக்கும் முடிவைச் சவூதியும் அதன் தோழர்களும் எடுத்தார்கள்.

சவூதி அரேபியாவுடன் அமெரிக்காவுக்கு நீண்டகால வியாபார அரசியல் தொடர்புகள் இருந்தாலும் கத்தாரில் அமெரிக்கா ஒரு இராணுவத் தளத்தை வைத்திருக்கிறது. அல்-உடெய்த் இராணுவ முகாமில் சுமார் 10 000 அமெரிக்க இராணுவத்தினர் தங்கியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான், ஈராக் சிரியா போர்களில் அமெரிக்காவின் முக்கிய ஒரு தளமாக அது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த நாட்டுப் போர்களின் 80 விகிதமான எரிசக்தி அத்தளத்தில் இருந்துதான் விமானங்களுக்காகக் கொடுக்கப்படுகிறது.

சவூதி அரேபியா மற்றும் நாடுகள் ஒதுக்கிவைத்தபின் அந்த இராணுவ முகாமை மேலும் வலிமைப்படுத்தி அமெரிக்கர்களை அங்கே நிரந்தரமாக இருக்கும்படி கத்தார் கேட்டுக்கொண்டிருக்கிறது.

அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இராணுவத் தளத்தை கத்தாரில் வைத்துக்கொண்டு அமெரிக்கா எதற்காக சவூதி அரேபியா போன்ற நாடுகளின் பக்கம் சாய்ந்திருக்கிறது ? என்ற கேள்விக்கான பதில் ஜெராட் குஷ்னர் குடும்பத்தினரின் சொந்தப் பொருளாதார நிலைப்பாடுகள் எனலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *