கானாவில் அமெரிக்கா போடும் திட்டம் என்ன?

அண்மையில் அமெரிக்கா தரும் பண உதவிக்காக  கானா பாராளுமன்றம் ஆமோதித்த  தீர்மானம் அமெரிக்கா போடும் திட்டத்தின் முதற்படி என்று நோக்கப்படுகிறது.

அல் கைதா, ஐ.எஸ் ஆகிய மிலேச்ச இயக்கங்கள் நேரடியாகவும் ஆபிரிக்கப் பிராந்திய தீவிரவாதிகளுக்குப் பக்கபலமாகவும் புர்க்கினோ பாஸோ, மாலி, மொரிதானியா, நைகர், சாட், கமரூன், ஆகிய நாடுகளில் மையங்களை வைத்துக்கொண்டு அல்ஜீரியா, நைஜீரியா, லிபியா, கமரூன் போன்ற நாடுகளில் தமது சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்க முயன்று, ஓரளவு வெற்றி கண்டு வருகிறார்கள் அந்தத் தீவிரவாதிகள்.
அவர்களை நேரிட ஆபிரிக்காவின் சஹெல் பிராந்தியத்தில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்கள் இராணுவத் தளங்களை நிறுவ ஆபிரிக்காவில் இடம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

தனது காலனியக் காலத் தொடர்புகளைப் பாவித்து பிரான்ஸ் பல ஆபிரிக்க நாடுகளில் தனது இராணுவத் தளங்களை நிறுவி வருகிறது. [படத்தில் சிகப்புப் புள்ளிகளால் அவை குறிக்கப்பட்டிருக்கின்றன.]

அந்தந்தச் சந்தர்ப்பங்களில் தான் நடாத்தும் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஏற்றபடி குறிப்பிட்ட தளங்களின் தேவைப்படும் இலக்கங்களை [சுமார் 2000 – 4000 வரை] மாற்றிக்கொள்கிறது பிரான்ஸ்.
2007 இல் AFRICOM என்ற பெயரில் ஆபிரிக்க நாடுகளுக்கு “உதவிகள்” செய்வதற்காகவும் பிரான்ஸ் இராணுவத்துடன் சேர்ந்து தீவிரவாத இயக்கங்களுக்கெதிராகப் போரிடவும் என்று அமெரிக்கா சுமார் 6000 இராணுவத்தினரை ஆபிரிக்காவின் வெவ்வேறு நாடுகளில் வைத்திருக்கிறது. அத்துடன் அத்தொகையை உயர்த்தி மேலும் சில இராணுவத் தளங்களை நிறுவவும் அமெரிக்கா இடங்களைத் தேடிக்கொண்டிருக்கிறது.
ஆனால் பிரான்ஸ் போன்றல்லாது அமெரிக்காவின் இராணுவத் தளங்கள் பெரும்பாலும் அதன் தளங்கள் உள்ள நாடுகளிலும் அமெரிக்காவிலும் சர்ச்சைகளை ஏற்படுத்துகின்றன என்றால் மிகையாகாது.

சமீபத்தில் ஆபிரிக்க நாடுகளை டிரம்ப் கேவலமான வார்த்தைகளால் [“shithole countries”] குறிப்பிட்டதால் அந்த நிலைமை மேலும் மோசமடைந்திருக்கிறது.
கானாவின் இராணுவத்தினருக்காக அமெரிக்கா 20 மில்லியன் டொலர்கள் செலவில் தளபாடங்கள், பயிற்சிகள் மற்றும் உதவிகள் செய்வது சமீபத்தில் கானா பாராளுமன்றத்தில் உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கு மாற்றாக கானாவின் விமான நிலையமொன்றின் பகுதியை அமெரிக்காவின் இராணுவப் பாவிப்புக்கு ஏற்றபடி மாற்றியமைக்கவும், கானாவினுள் அமெரிக்க போர்த் தளபாடங்களை வரிகளின்றி இறக்குமதி செய்யவும், கானாவின் வானொலி அலைகளை எவ்வித எல்லையுமின்றிப் பாவிக்கவும் கானா அரசு அமெரிக்காவுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. ஆனால், இதுவரை கானாவில் அமெரிக்காவின் இராணுவத் தளம் அமைக்கப்படவில்லை.
சுமார் இருபது வருடங்களுக்கு அதிகமாக கானாவும் அமெரிக்காவும் இராணுவத் தொடர்புகளைக் கொண்டிருப்பினும் கடந்த வாரத்தில் அறிவிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் கானாவின் மக்களிடையே பெரும் எதிர்ப்பை பெற்றிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இவைமூலமாக  கானாவின் இறையாண்மை இந்த ஒப்பங்களால் மீறப்படுகிறதென்பமீறப்படுகிறதென்பது எதிர்ப்பாளர்கள் கருதுவது ஆகும் .

எழுதுவது சாள்ஸ் ஜே

 

 

http://www.vetrinadai.com/news/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%86/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *