Sunday , July 22 2018
Home / Featured Articles / காஸா பகுதியில் – வேதாளம் மீண்டும் மரமேறுகிறது?

காஸா பகுதியில் – வேதாளம் மீண்டும் மரமேறுகிறது?

மார்ச் 30 அன்று காஸா – இஸ்ரேல்  எல்லைகளில் நடாத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட பலஸ்தீனர்கள் 14 பேர்கள் கொல்லப்பட்டு 700க்கும் மேலானவர்கள் காயமடைந்தார்கள் என்பதும் மேலும் ஐந்து பேராவது காஸாவின் மற்றைய பகுதிகளில் கொல்லப்பட்ட்டார்கள் என்பது சர்வதேச ஊடகங்களில் அதிக கவனத்தைப் பெறவில்லை. “அவமானத்தைவிடச் செத்து அழிவதே மேல்” என்ற கூக்குரலுடன் தொடர்ந்தும் பாலஸ்தீனர்கள் காஸாவில் நடத்திவரும் கண்டனப் பேரணிகள் 06.04 வெள்ளியன்று மீண்டும் காத்திரமாகி மேலும் அதிக உயிர்களைப் பலியெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1967 இல் எகிப்தின் கையிலிருந்து“ஆறு நாட்கள் போரில்” இன்றைய இஸ்ராயேலால் கைப்பற்றப்பட்ட காஸா பிரதேசம் அதற்கு முன்பு ரோமர், மக்கடோனியர், பெர்சியர், இஸ்ராயேலர், பண்டைய எகிப்தியர் போன்ற பல ஆட்சியாளர்களின் கீழும் இருந்திருக்கிறது. பலஸ்தீனா பிரதேசத்தின் ஆளுமைப் பகுதிகளில் ஒன்றான காஸா ஒரு பக்கம் இஸ்ரேலையும், இன்னொரு பக்கம் எகிப்தையும் நில எல்லையாகவும் கொண்டு கடல் எல்லையாக மத்தியதரைக் கடலைக் கொண்டிருக்கிறது.

2005 வரை அப்பிராந்தியத்தைத் தனது கையில் வைத்திருந்த இஸ்ரேல் அங்கிருந்து தனது இராணுவத்தை அங்கிருந்து வெளியேறியது. அங்கே வாழ்ந்த யூதர்களின் குடியிருப்புக்களையும் அங்கிருந்து அகற்றியது. தற்போது சுமார் 3,500 கிறீஸ்தவர்களைத் தவிர பெரும்பாலும் அங்கே வாழ்பவர்கள் சுன்னி இஸ்லாம் மார்க்க முஸ்லீம்களே.

சுமார் 365 ச.கிமீற்றர்கள் கொண்ட காஸா பிராந்தியத்துக்குள் சுமார் 1.8 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். உலகிலேயே மக்கள் நெருக்கமாக வாழும் பிராந்தியங்களில் ஒன்றான காஸா உலகில் மிகவும் அதிகமாக குடிமக்களால் வளரும் பிராந்தியங்களில் ஒன்றுமாகும். சதுர கி.மீற்றர்களுக்கு சுமார் 42, 600 பேர் இங்கே வாழ்கிறார்கள். பிள்ளை பெற்றுக்கொள்ளும் வயதில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் சராசரியாக இங்கே 4.4 பிள்ளைகள் பெற்றுக்கொள்கிறார்கள்.

2006 இல் அப்பிராந்தியத்தில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்றார்கள் ஹமாஸ் என்ற தீவிரவாத இயக்கத்தினர். அவர்களது ஆட்சியும் அமைக்கப்பட்டது. இஸ்ராயேலை அழிப்பதைத் தங்கள் கோட்பாடுகளிலொன்றாகக் கொண்டிருக்கும் ஹமாஸ் இயக்கம் பெரும்பாலான பலஸ்தீனப் பிராந்தியங்களில் ஆட்சியமைத்த பத்தா இயக்கத்தினரிடமும் முரண்டு பிடித்துக்கொண்டிருந்தது.

ஹமாஸின் போக்கைத் தண்டிக்க இஸ்ராயேல் 2006 இலிருந்து காஸா பிராந்தியதுடன் எவ்வித பொருளாதாரத் தொடர்புகளையும் எவரும் வைத்துக்கொள்ளமுடியாமல் துண்டித்துவிட்டார்கள். அருகிலிருந்த எகிப்தும் அதையே செய்தது. கடல் எல்லையையும் இஸ்ராயேல் தன் கண்காணிப்பில் வைத்திருக்கிறது. அதேசமயம் பாலஸ்தீன அரசைத் தன் கைகளுக்குள் வைத்திருக்கும் அல்-பத்தா அமைப்பும் ஹமாஸின் தீவிரவாத நடவடிக்கைகளைத் தண்டிப்பதற்காக அப்பிராந்தியத்துக்கு வேண்டிய எதையும் செய்யாமல் தவிர்த்தே வருகிறார்கள்.

ஹமாஸ் இயக்கத்தினர் நீண்ட காலமாக இஸ்ராயேலுடனான தங்கள் நீண்ட எல்லைக்குக் கீழாகச் சுரங்கங்களைத் தோண்டி அவைகள் மூலம் இஸ்ராயேல் பகுதிக்குள் சென்று யூதர்களைத் தாக்கி வருகிறார்கள். அதேபோன்று இரகசியச் சுரங்கங்கள் மூலம் எகிப்தியப் பகுதிகளின் ஊடாகத் தேவைக்கான ஆயுதங்களையும், உணவுப்பண்டங்களையும் கடத்திவருகிறார்கள். சில வருடங்களுக்கு முன்னர் எகிப்துடன் நெருங்கிய ஒப்பந்தங்கள் செய்துகொண்ட இஸ்ராயேல் அந்தச் சுரங்கங்களில் பலவற்றைத் தகர்த்துவிட்டது.

இதன் விளைவாக காஸா ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை போல மாறியிருக்கிறது. சுமார் 46 விகிதமானவர்கள் வேலையற்றவர்களாக இருக்கும் இப்பிராந்தியத்தின் குடிநீர்த் தேவை பாலஸ்தீன அரசினால் 10 விகிதமே தீர்க்கப்படுகிறது. தினசரி நான்கு மணித்தியாலங்களே மின்சார வசதி கொடுக்கப்படுகிறது.

2007 முதல் பல தடவைகள் ஹமாஸ் காஸா பிராந்தியத்தில் மக்களை ஒன்றுதிரட்டி எல்லைகளில் இஸ்ராயேலைத் தாக்க பதிலுக்கு இஸ்ராயேல் எங்கேயும் ஓடி ஒளிந்துகொள்ள முடியாத காஸா மக்களை நிலப்பரப்பிலும், கடலிலிருந்து, வானத்திலிருந்தும் தாக்கிப் பதிலடி கொடுக்கிறார்கள். 2014 இல் ஒரு போராகவே அது உண்டாகி பலர் கொல்லப்பட்டு காஸாவின் பிரதான பகுதிகள் பல தரைமட்டமாக்கப்பட்டன.

ஐ.நா வும், ஐரோப்பிய ஒன்றியமும் பல தடவைகள் காஸாவின் நிலையை மாற்றத் திட்டங்களில் ஈடுபட்டாலும் ஹமாஸ் இயக்கத்தினரின் நடவடிக்கைகளால் இஸ்ராயேலோ, அமெரிக்காவோ அவற்றுக்கு முட்டுக்கட்டை போடப்படுகின்றன. டிரம்ப் சமீபத்தில் பாலஸ்தீன அரசுக்கான அமெரிக்க உதவிகளை நிறுத்தி, ஹாமாசுக்கான உதவிகளை கத்தாரைத் தண்டிப்பதன் மூலம் நிறுத்தியபின் காஸாவின் நிலைமை படுமோசமாகிவிட்டதாகப் பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடைசியாக ஹமாஸ் திரட்டிய 30 000 பேர்களுக்கும் அதிகமான பேரணி இஸ்ராயேலிய எல்லைகளில் இராணுவத்தைத் தாக்கியதாலேயே தாங்கள் திருப்பித் தாக்கியதாகச் சொல்கிறார்கள் இஸ்ராயேலியர்கள். பாலஸ்தீனர்களோ தாம் அமைதியாகவே எதிர்ப்பைக் காட்டியதாகச் சொல்கிறார்கள்.

ஹமாஸ் இயக்கத்தினரைப் பொறுத்தவரை அவர்களது வெளிநாட்டு ஆதரவுகள் பெரும்பாலும் வெட்டப்பட்டுவிட்டன. பாலஸ்தீன அரசிடமிருந்தும் ஆதரவு பெறமுடியாது. ஐரோப்பிய ஒன்றியமோ, அமெரிக்காவோ ஹமாஸ் ஆயுதப் போராட்டத்தை நிறுத்தும்வரை அவர்களது காஸா அரசாங்கத்துக்கு உதவப் போவதில்லை என்று கைவிட்டுவிட்டார்கள். இந்த விரக்தியான நிலையால் உந்தப்பட்ட அவர்கள் அன்றாட உணவுக்கே வழியில்லாமல் இழக்க எதுவுமில்லாமல் இருக்கும் மக்கள் கூட்டத்தை ஒன்றுபடுத்தி எல்லைகளில் இஸ்ராயேலைத் தாக்குவதன் மூலம் இஸ்ராயேல் மீது சர்வதேசக் கண்டிப்பு உண்டாகும் என்று நம்புகிறார்கள். இஸ்ராயேல் திரும்பத் தாக்கிப் பாலஸ்தீனர்களைக் கொல்லும்போது அதைத் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காகப் பாவிக்க ஹமாஸ் இயக்கத்தினர் மீண்டும் வெள்ளியன்று புதிய எல்லைத் தாக்குதல்களில் மக்களை இறக்கப்போகிறார்கள்.

இஸ்ராயேல் தனது எல்லைகளில் ஏற்படும் சலசலப்பைக் காட்டமாகவே எதிரிடும். பாலஸ்தீன அரசு தனது குரலை அதிகம் எழுப்பமுடியாத நிலையில் இருக்கிறது. ஐ.நா வின் பாதுகாப்புச் சபையில் இஸ்ராயேலுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கமுடியாமல் அமெரிக்கா தடுத்துவிடும். ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கும் மனக்கசப்புக்களால் ஐரோப்பிய ஒன்றியமும் காஸா மக்களுக்காக நிஜத்தில் எதுவும் செய்யமுடியாது.

தொடர்ந்தும் எல்லாப் பக்கங்களில் சித்திரவதைக்கு உள்ளாகப்போவது காஸாவின் பாலஸ்தீனர்களே.
[05.04.2018] சார்ள்ஸ் ஜெ.போர்மன்

About வெற்றி நடை இணையம்

Check Also

“வி என் மதியழகன் சொல்லும் செய்திகள்” நூல் வெளியீட்டு விழா

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் ஒலிபரப்பாளர் வி என் மதியழகன் அவர்களது நூல் வெளியீட்டு விழா   23ஆம் தேதி சனிக்கிழமை மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com