ஈரான் – அமெரிக்க ஒப்பந்தத்தின் எதிர்காலம்.

ஈரான் பக்கத்திலிருந்து சில நாட்களாகவே “எங்களுக்குத் தேவையான ஆயுதங்களை எங்கள் இஷ்ட்ப்படி நாம் தயாரித்துக்கொள்வோம் அல்லது கொள்வனவு செய்வோம் அதை யாராலும் தடுக்கமுடியாது. அவற்றுக்காக நாம் எவரது அனுமதியை நாடவும் போவதில்லை,” என்ற சவால் வந்துகொண்டிருக்கிறது.

அதன் காரணம் அமெரிக்காவின் அதிபர், ஈரானுடன் பதவியிறங்கிய ஜனாதிபதி ஒபாமா செய்துகொண்ட அணு ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தைத் தான் ரத்து செய்துவிடுவேன் என்று பதவியேறிய காலத்திலிருந்தே சொல்லிக்கொண்டிருப்பதாகும். அந்த ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை ஐரோப்பிய ஒன்றியமும் டிரம்ப்பும் வெவ்வேறு கிளையில் நிற்கிறார்கள். அவ்வொப்பந்தத்தைப் பேணி ஈரானுடன் மீண்டும் சகஜமான அரசியல், பொருளாதாரத் தொடர்புகளை உண்டாக்கிக்கொள்ள ஐ.ஒன்றியம் விரும்பும் அதேசமயம் டிரம்ப்போ ஈரானை நம்பமுடியாது என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்.

 

இச்சமயத்தில் ஐ.ஒன்றியத்தின் சார்பாக பிரெஞ்ச் ஜனாதிபதி மக்ரோன் டிரம்ப்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடாத்தினார். தனது மூன்று நாள் அமெரிக்க விஜயத்தில் மக்ரோன் அமெரிக்க – ஈரானிய ஒப்பந்தத்தைத் தொடரக் கேட்டுக்கொண்டதுடன் சிரியாவில் அமைதிப் பேச்சுவார்த்தை பற்றியும் பேசினார்.

 

ஒரு வாரத்துக்கு முதல் “நாங்கள் சிரியாவிலிருந்து வெளியேற விரும்புகிறோம், அதற்கு முன்பு ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றிய பிராந்தியங்களில் ஈரான் காலூண்ட விடாமலிருக்கக்கூடியதாகச் செய்வோம்,” என்று டிரம்ப் தெரிவித்தார். அதே சமயம் அமெரிக்காவின் மத்திய கிழக்கு நண்பரான சவூதி அரேபியா “நாங்கள் எங்கள் இராணுவத்தை சிரியாவுக்கு அனுப்பத் தயாராக இருக்கிறோம்,” என்று அறிவித்தது.

 

இதன் மூலம் ஈரான் – அமெரிக்க அணு ஆயுதம் சம்பந்தப்பட்ட 2015 ம் ஆண்டு ஒப்பந்தம் மத்திய கிழக்குப் பிராந்திய அரசியலுடன் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று தெரியவருகிறது. அதாவது, சிரியாவின் நட்பு நாடான ஈரான் ஐ.எஸ் இடமிருந்து அமெரிக்கா மீட்டெடுத்த இடங்களில் காலூன்ற அனுமதிக்கும் நிலைமையைத் தடுக்க அமெரிக்கா சவூதி அரேபியாவின் இராணுவத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளக்கூடும்.

 

மக்ரோன் – டிரம்ப் பேச்சுவார்த்தைகளின் பின்பு “ஈரானுடன் ஒபாமா செய்துகொண்ட ஒப்பந்தத்தில் பேச்சுவார்த்தைகள் மூலம் மேலும் சில விடயங்களைச் சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில் நாம் தற்போதைய ஒப்பந்தத்தை கிடப்பில் போடாமல் இருக்கத் தயார்,” என்று இரண்டு தலைவர்களும் தெரிவித்திருக்கின்றனர்.    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *