அமெரிக்காவுக்கு போட்டியா? – ஐரோப்பிய இராணுவப் படை

ஐக்கிய அமெரிக்காவுக்கு ஈடாக ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க டொலர்களுக்கு எதிராக யூரோ  என்ற நாணயம் போன்றவைகளை உருவாக்கிய ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் நேட்டோ அமைப்புக்கு ஈடாக ஒரு ஐரோப்பிய ஒன்றிய இராணுவ அமைப்பை உண்டாக்குவதற்கும் நீண்ட காலமாகத் திட்டமிட்டுக்கொண்டிருந்தன.
சர்வதேச அரசியல், பொருளாதார விடயங்களில் நீண்டகாலமாக ஐரோப்பாவும், அமெரிக்காவும் ஒன்றிணைந்து செயற்பட்டாலும் இரண்டா உலகப் போரில் அடிபட்டு வீழ்ந்த ஐரோப்பாவை மீண்டும் உயிர்ப்பிப்பதில் உதவிய அமெரிக்காவின் “மூத்தண்ணன்” மனப்பான்மை மீது ஐரோப்பிய நாடுகளுக்கு எப்போதுமே ஒரு வெறுப்பு உண்டு.
அத்துடன் பொருளாதார ரீதியில் ஐரோப்பிய நாடுகள் காலனிய ஆதிக்கத்தால் பெற்றிருந்த சாதகமான நிலைமையைப் பிற்காலத்தில் அமெரிக்கா தனது டொலரின் ஆதிக்கத்தால் பறித்தெடுத்து அதன்மூலம் உலகப் பொலீசாகவும் நடந்துகொள்வதையிட்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு மனக்கசப்பு உண்டு.
ஆனாலும் ஒபாமாவின் காலம் வரை ஓரளவு நட்பாக ஐரோப்பாவுடன் நடந்துகொண்ட அமெரிக்கா டிரம்பின் ஆட்சிக்காலத்தில் “உங்களுக்காக நாங்கள் உதவுவதற்கான விலையை நீங்கள் செலுத்தவேண்டும்,” என்று நாட்டோ அமைப்பிற்காக ஐரோப்பா மேலும் அதிக அங்கத்துவத் தொகை செலுத்தவேண்டும் என்று கட்டுப்பாடு போடுகிறது. அத்துடன் 2015 ம் ஆண்டுப் பகுதியில் ஐரோப்பாவுக்குள் நுழைந்த அகதிகளின் எண்ணிக்கையும் ஐரோப்பிய நாடுகள் சொந்த இராணுவ அமைப்பு ஒன்றை உண்டாக்குவதில் விரைவாக ஈடுபட வைத்தன.
ஆபிரிக்கா, மத்திய கிழக்கு போன்ற நாடுகள் ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளை அடுத்திருப்பதால் அப்பிராந்தியங்களில் ஏற்பட்டுவரும் அரசியல் குழப்பங்கள் ஐரோப்பா என்ற கோட்டைக்குள் அந்த நாட்டவர்கள் அகதிகளாக நுழைந்து, சமூக அமைப்பு, பாதுகாப்பு நிலைமை போன்றவற்றில் எதிர்பாராத பிரச்சினைகளை உண்டாக்குவதையும் தடுக்க ஐரோப்பிய இராணுவ அமைப்பு ஒன்று உதவும் என்றும் முக்கிய ஐரோப்பிய நாடுகள் கணிக்கின்றன.
இவைகளில் இவ்விடயத்தில் முன்னிற்கும் நாடாக இருப்பது பிரான்ஸ். இரண்டாம் உலகப் போரின் பின்பு சொந்த இராணுவத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் விருப்பமில்லாமல் இருந்த ஜேர்மனி சமீபகாலங்களில் தன் கருத்தை மாற்றிக்கொண்டிருக்கிறது. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிக்கொண்டாலும்கூட ஒரு ஐரோப்பிய இராணுவ அமைப்பில் இருப்பதில் ஆர்வமாக இருக்கிறது. இவர்களைத் தவிர நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளும் இம்முயற்சியில் ஒரு திட்டத்தை உண்டாக்குவதில் ஈடுபட்டு வருவதாக பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் அறிவித்திருக்கிறார்.
2020 ம் ஆண்டளவில் தயாராக இருக்கும் இந்த இராணுவ அமைப்பை நெருக்கடிகால ஐரோப்பிய இராணுவம் என்ற பெயரில் தேவையான சமயங்களில் பாவிப்பதற்குத் தயாராக இருக்கக்கூடியதாக உண்டாக்கவேண்டும் என்பதே இந்த நாடுகளின் விருப்பம். தற்போதைய நிலைமையில் சுமார் 12 நாடுகள் இவ்விடயத்தில் ஆர்வம் தெரிவிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆரம்பகாலத்தில் இல்லாவிடினும் எதிர்காலத்தில் மற்றைய ஐரோப்பிய நாடுகளும் அவ்வமைப்பில் இணைந்துகொள்ளாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

எழுதுவது சாள்ஸ் ஜெ.போர்மன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *