எச்சரிக்கும் அறிக்கைகள் நிஜமாகுமாகிவிடுமா?

சுற்றுப்புற சூழலைப் பற்றியும், நீண்டகால காலநிலை மாற்றங்கள் பற்றியும் மனித குலத்தை எச்சரிக்கும் பல விஞ்ஞான அறிக்கைகள் சமீப காலமாக வந்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் சமீபத்தில் வளைகுடா நீரோட்ட அமைப்புப் பற்றிய இரண்டு ஆராய்ச்சிகள் வெளிவந்திருக்கின்றன.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மனிதர் வாழக்கூடியதாக இருப்பதற்குக் காரணம் வளைகுடா நீரோட்ட அமைப்பு. இது the Atlantic meridional overturning circulation (AMOC) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் வெம்மையான பகுதியிலிருந்து நீரை வடக்கு நோக்கிக் காவிச் செல்வதன் மூலம் இந்த நீரோட்ட அமைப்பு பூமியின் இன்றைய காலநிலைக்கு உதவுகிறது.

மனித நடவடிக்கைகளால் உலகம் வெப்பமாவதால் தற்போதைய துருவத்தில் இருக்கும் பனிமலைகள் உருகிவருகின்றன என்று பல ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. அப்படி உருகுவதால் வரும் குளிர் நீர் உலகின் மத்திய பாகத்தை நோக்கி நகரும்போது அது வளைகுடா நீரோட்ட அமைப்பு வடக்கை நோக்கிக் காவிவரும் வெம்மையான நீர்ப்பரப்பைக் குளிராக்கி அதன்மூலம் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தினால் உலகின் வடபகுதி மேலும் குளிர்மையாகிவிடும். அது பரவி உலகம் மீண்டும் ஒரு நீண்டகால நிரந்தரப் பனிக்காலத்தை எதிர்நோக்கும் என்கிறது புவியியல் கோட்பாடு.

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இரண்டு ஆராய்ச்சிகளும் வளைகுடா நீரோட்ட அமைப்பானது கடந்த 1 600 வருடங்களில் காணாத அளவுக்குப் பலவீனமாகியிருக்கிறது என்பதாகும். மேற்கண்ட விபரங்கள் பல ஊடகங்களிலும் வெளியாகியதில் நாம் புதியதொரு பனிக்காலத்தை நோக்கிக்கொண்டிருக்கிறோமா என்று ஒரு சாரார் கேட்கிறார்கள். ஆனால், மேற்கண்ட ஆராய்ச்சிகள் மட்டும் அப்படியொரு நிலைமை வருமா என்பதைப் புரிந்துகொள்வதற்குப் போதுமானவை அல்ல என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதுபற்றிய ஆராய்ச்சிகள் மேலும் தொடரப்பட்டு புதிய விபரங்களைத் தெரிந்துகொண்டதன் பின்புதான் தற்போதைய நிலைமைக்கான காரணம் என்ன என்பதைச் சொல்லமுடியும் என்கிறார்கள் அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *