பொக்கோ ஹறாம் இயக்கமும் நைஜீரிய அரசும்.

ஒரு சில மாதங்களாகவே பல அரசியல் வட்டாரங்கள் சந்தேகப்பட்டதைக் கடந்த வாரம் நைஜீரிய  தகவல் தொடர்பு அமைச்சர் லாய் முஹம்மது உத்தியோகபூர்வமாக அறிவித்தார். “பொக்கோ ஹராம் இயக்கத்தினருடன் நாம் சில காலமாகவே தொடர்பு கொண்டு ஒரு போர் நிறுத்த ஒப்பந்தந்தை நிலை நாட்ட பேச்சுவார்த்தை நடாத்திக்கொண்டிருக்கிறோம்,”

நைஜீரியாவின் வட பகுதியில் வேரூன்றியிருக்கும் பொக்கோ ஹறாம் தீவிரவாதிகள் பல தடவைகளிலும் இளம் பெண்களைக் குறிப்பாக பாடசாலை மாணவிகளைக் கடத்திச் சென்று தங்களது இச்சைக்குப் பாவிப்பதற்கும், அடிமைகளாக விற்பதற்கும் பிரபலமானவர்கள். 2009 முதல் இதுவரை சுமார் 20 000 பேர்களைக் கொன்றிருக்கும் பொக்கோ ஹறாம் தீவிரவாதிகள் நைஜீரிய இராணுவத்தினருக்கு எதிராக மட்டுமன்றி நாட்டின் பொதுமக்களிடையே தங்கள் கோட்பாட்டை ஆதரிக்காதவர்களுக்கு எதிராகவும் போர் தொடுத்திருக்கிறது.

நைஜீரியாவையும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் காலனித்துவக் காலத்தில் ஐரோப்பியர்கள் புகுந்து சுத்தமான வாழ்க்கை முறையையும் ஆரம்பகால இஸ்லாத்தின் கோட்பாடுகளையும் அசுத்தப்படுத்திவிட்டதாகக் குற்றஞ்சாட்டும் பொக்கோ ஹறாம் “புனிதமான இஸ்லாத்தின் வழிகள்” என்ற பெயரில் நாடோடிகளாக வாழ்ந்த முஹம்மதுவின் காலத்தில் இருந்த வாழ்க்கை முறைகளை அறிமுகப்படுத்த முற்படுகிறது. அதனால் பாடசாலைகளைத் தாக்குவதும் பெண்களைப் பாடசாலைகளுக்குச் செல்லாமல் மிரட்டுவதும் அவர்களின் முக்கிய வழிகளில் ஒன்றாக இருக்கிறது. அத்துடன் கிராமங்களை அதிரடியாகத் தாக்குதல்கள் நடாத்தி மிலேச்சத்தனமான அங்குள்ளவர்களைக் கொல்வதும் கடத்திச் செல்வதும்கூட அவ்வியக்கத்தினரின் வழக்கங்கள்.

2002 ம் ஆண்டில் முஹம்மது யூசுப் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்ட பொக்கோ ஹறாம், பிற்காலத்தில் அல் கைதா இயக்கத்துடன் தொடர்புகளை உண்டாக்கிச் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இஸ்லாமிய சுன்னி மார்க்கத்தின் கோட்பாடுகளின்படி சுத்தமான ஷரியா சட்டங்களின் மூலம் மக்களை ஆளவேண்டும் என்பதே முஹம்மது யூசுபின் கோட்பாடு. நீண்ட காலமாக நைஜீரிய இராணுவம் முஹம்மது யூசுபைத் தேடிக் கடைசியாக 2009 இல் வட நைஜீரியாவில் மைதிகூரி நகரில் இருந்த பொக்கோ ஹறாம் இயக்க முகாமைத் தாக்கியபோது கொலை செய்தது. அத்துடன் இயக்கத்தின் சில நூறு பேர்களும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தலைவனை இழந்த இயக்கம் அழிந்துவிடும் என்றும் நைஜீரியாவின் இராணுவம் பொக்கோ ஹறாமுக்கெதிரான போரில் வெற்றிபெற்றுவிட்டதாகக் குறிப்பிடப்பட்டாலும் மிக விரைவிலேயே அபூபக்கர் செய்க்காவு என்பவரது தலைமையில் அவ்வியக்கம் மேலும் கொடூரமான தாக்குதல்களில் ஈடுபட ஆரம்பித்தது. பாடசாலைச் சிறுமிகளைக் கடத்திச் செல்வது புதிய தலைமையில் ஒரு முக்கிய அடையாளமாக இருந்தது.

மீண்டும் 2016 இல் அபு மூஸாப் அல்-பர்ணாவி என்பவர்தான் பொக்கோ ஹறாம் இயக்கத்தின் தலைவர் என்று அறிவிக்கப்பட்டது. இச்சமயத்தில் அவ்வியக்கம் ஐ.எஸ் இயக்கத்தினருடன் தொடர்புகளை உண்டாக்கிக்கொண்டு அவர்களது கிளையாகவும் நைஜீரியாவையும் அதைச் சுற்றியுள்ள நாடுகளின் பகுதிகளிலும் தனது நடவடிக்கைகளை விஸ்தரித்திருந்தது.

அபூபக்ககர் செய்க்காவு, அபு மூஸாப் அல்-பர்ணாவி என்ற பெயர்களில் இரண்டு பேர்கள் பொக்கோ ஹறாமின் தலைவர்களாக அறிவிக்கப்பட்டிருப்பதால் அவ்வியக்கம் இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறது என்று கருதப்படுகிறது. அல் கைதா, ஐ.எஸ் ஆகிய இரண்டு இயக்கங்களும் ஆபிரிக்காவில் காலூன்ற பொக்கோ ஹறாமைப் பாவிக்கின்றன என்றும் கருத இடமுண்டு. இவ்விரண்டு தலைமைகளைத் தவிர மேலும் பிரிவுகளும் இருக்கலாம் என்றும் சில செய்திகள் அறிவிக்கின்றன. எப்படியாயினும் இதுபற்றிய விபரங்கள் எதையும் பொக்கோ ஹறாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

அபு மூஸாப் அல்-பர்ணாவியின் தலைமையிலுள்ள பொக்கோ ஹறாம் பிரிவுடனேயே நைஜீரிய அரசு பேச்சுவார்த்தைகள் நடாத்திவருவதாகத் தெரிகிறது. அபூபக்கர் செய்க்காவுவின் பகுதியினர் எவ்வித பேச்சுவார்த்தைக்கும் தயாராக இல்லை. ஒரு முறை கடத்தப்பட்ட சுமார் 110 சிறுமிகளில் அனேகமாக எல்லோரையும் அபு மூஸாப் அல்-பர்ணாவி நைஜீரிய அரசிடம் கையளித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதற்காக அரசு சுமார் 5 மில்லியன் டொலர்களைக் கொடுத்ததாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.

நைஜீரிய அரசு பொக்கோ ஹறாம் அமைப்புக்கெதிரான தனது தாக்குதல்களைப் பற்றிப் பெரும்பாலும் ஊடகங்களுக்கு முழுவதாகத் தெரிவிப்பதில்லை. ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்ற வகையில் மிகவும் மோசமான முறையிலேயே இராணுவமும் தனது தாக்குதல்களிலும் விசாரணைகளிலும் ஈடுபடுவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

எப்படியாயினும் நைஜீரிய அரசு அறிவித்திருக்கும் பேச்சுவார்த்தைகள் அபு மூஸாப் அல்-பர்ணாவியின் பகுதி இயக்கத்தை அவர்களது தாக்குதல்களைக் கைவிட்டுவிட்டு அரசியலில் ஈடுபட வரும்படி அழைப்பதற்காகவா, அல்லது மீட்புப் பணம் கொடுத்து அவர்களிடம் இருக்கும் இளவயதுப் போராளிகளையும் கடத்தப்பட்ட சிறுமிகளையும் விடுவிக்கச் செய்வதற்காகவா என்ற விபரங்கள் எதையும் நைஜீரிய அரசு வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *