ஊடகங்களை எதிரிகளாகக் கையாளுதல் அதிகரிக்கிறது!!

பத்திரிகையாளர்களையும், ஊடகங்களையும் எதிரிகளாகக் கருதும் தன்மை உலகின் பல நாடுகளிலும் அதிகரித்து வருவதாக 25.04 அன்று உலகின் ஊடகச் சுதந்திரம் பற்றிய “எல்லைகள் தாண்டிய ஊடகவியலாளர்கள்” [ Reporters Without Borders ] அமைப்பின் வருடாந்தர அறிக்கை தெரிவிக்கிறது.

அறிக்கையில் ஐரோப்பிய நாடுகளான மால்டா, செக் ரிப்பப்ளிக், ஸ்லோவாக்கியா, செர்பியா ஆகிய நாடுகளில் அதிகாரத்திலிருக்கும் அரசுகள் திட்டமிட்டே ஊடகவியலாளர்களைக் கேவலப்படுத்துவது கவனிக்கப்பட்டிருக்கிறது. அவைகளைத் தவிர போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளிலும் சுதந்திரக் குரலுக்குப் போடப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் ஊடகச் சுதந்திரத்திரத்தில் ஐரோப்பியப் பிராந்தியத்தை மொத்தமாகக் கீழிறக்கியிருப்பதுச் சுட்டிக்காட்டப்படுகிறது.

சர்வதேச ரீதியில் நோர்வே உலகின் பத்திரிகைச் சுதந்திரத்தை மதிக்கும் முதலாவது நாடாகவும் வட கொரியா அச்சுதந்திரத்தை முற்றாக மதிக்காத நாடாகவும் இருப்பதாகக் குறிப்பிடுகிறது அந்த அறிக்கை.

ரஷ்யா, சீனா மற்றும் டிரம்ப்பின் நடவடிக்கைகள் ஊடகவியலாளர்களைத் தரமிறக்குவதாக இருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.  உலகில் அதிக பத்திரிகையாளர்களைச் சிறையில் போட்டதன் மூலம் உலகின் மோசமான பத்திரிகைச் சுதந்திரம் உள்ள நாடுகள் 25 இல் துருக்கியும் இடம்பிடித்திருக்கிறது.

அறிக்கையில் இருக்கும் 180 நாடுகளில் இலங்கை 131 வது இடத்தையும் இந்தியா 138 வது இடத்தையும் பத்திரிகைச் சுதந்திரத்தில் பெறுகின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *