வட கொரியா – அமெரிக்கா சந்திப்பு நடக்காது!

“சரித்திரத்தில் ஒரு வேதனையான நிகழ்வு,” என்று சொல்லி 12.06 இல் சிங்கப்பூரில் வட கொரிய அதிபருடன் திட்டமிட்ட தனது சந்திப்பை நிறுத்திவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிக்கிறார்.

“நீங்கள் சமீபத்தைய அறிக்கைகளில் காட்டிவரும் வெறுப்பும், விரோத மனப்பான்மையும் நாங்கள் திட்டமிட்டிருந்த நேரடிச் சந்திப்பை இப்போதைக்கு நடாத்துவது பிரயோசனமில்லை என்று காட்டுகிறது,” என்று கிம் யொங் உன்னுக்கு வெள்ளை மாளிகையிலிருந்து அதிகாரபூர்வமாகச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

சுமார் ஒரு வாரத்துக்கு முன்பு தென் கொரியா, அமெரிக்க இராணுவத்துடன் சேர்ந்து நடத்திய இராணுவப் பயிற்சிகளைச் சுட்டிக்காட்டி வட கொரியா தான் தென் கொரியாவுடன் நடத்தவிருந்த சந்திப்பொன்றை நிறுத்திவிட்டது.

இதற்குக் காரணம் சீனாவாக இருக்கலாம் என்று தான் சந்தேகப்படுவதாக டிரம்ப் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் வட கொரிய அதிபரும் சீனாவும் சந்தித்தபின்புதான் வட கொரிய அதிபரின் நடப்புக்கள் விரோதமாக மாறியிருப்பதைத் தான் கவனிப்பதாக டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

அதே சமயம் வட கொரியா தனது அணு ஆயுதப் பரிசோதனைகளைச் செய்த ஆராய்ச்சிசாலையை இன்று சர்வதேச நிருபர்களை அழைத்து அவர்கள் முன்பு தரைமட்டமாக்கியது. அதுபற்றிய எவ்வித சொந்த ஆராய்வுகளை செய்ய வட கொரியா அனுமதிக்கவில்லை. நிருபர்கள் தங்களுடன் கொண்டுபோயிருந்த செயற்கைக்கோள் தொலைபேசிகளும், அணுசக்தி ஆராய்வுக் கருவிகளும் வட கொரிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டன.

தகர்க்கப்பட்ட ஆராய்ச்சி நிலையம் ஒருவேளை பாவிப்புக்கு உகந்ததாக இல்லாததாகியிருக்கலாம், அல்லது வட கொரியா ஏற்கனவே தனது பேச்சுவார்த்தைகளில் பாவிப்பதற்கு ஏற்றபடி தேவையான அளவு அணு ஆயுதங்களைத் தயாரித்து முடித்திருக்கலாம் என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *